சென்னை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, “தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெக-வினர்” என தலைப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்க செய்வதாக குறிப்பிட்டு உள்ளார். ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெக-வினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர் என சாடியுள்ளார்.
முதல்வர் தலைவராக இருக்கும் அவரது சொந்த கட்சியினரே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, முதல்வர் விஜய் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
