கடலூர் அதிமுக ஆபீசை சூறையாடிய மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள்: எடப்பாடி அணியினர் பகீர் குற்றச்சாட்டு

 

கடலூர்: கடலூர் அதிமுக அலுவலகத்தை மாஜி அமைச்சர் ஆதரவாளர்கள் சூறையாடி சேதப்படுத்தி விட்டதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த புதிய மாவட்ட செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில், அதிமுகவில் உள்கட்சி பூசல் எழுந்த நிலையில், வேலுமணியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரனை மாவட்ட செயலாளராக நியமித்தார். இதையடுத்து கடலூர் அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், உரிய ஆவணங்களுடன் ஜூன் 1ம்தேதி நேரில் ஆஜராக கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதுநகர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அதிமுக மாஜி அமைச்சரான, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத்தின் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வராமலேயே அதிமுக அலுவலகத்தின் சாவியை அங்கு ஒப்படைத்து சென்றனர். தொடர்ந்து புதிய செயலாளரான எம்.சி.தாமோதரன் தலைமையில் மாநகர செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் உள்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, எம்.சி.தாமோதரனிடம், அதிமுக அலுவலகத்தின் சாவியை கோட்டாட்சியர் சுந்தரராஜன் ஒப்படைத்தார்.
சாவியை பெற்ற உற்சாகத்தில் அதிமுக ஆபீசுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

அதிமுக அலுவலகம் உட்புறம் முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அங்கிருந்த மின்விசிறி, கம்ப்யூட்டர், பால் சீலிங், மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அகற்றப்பட்டு காலி கூடாரமாக காட்சியளிக்க, கட்சித் தலைமையிடம் முறையிட்டனர். பின்னர் இதுபற்றி மாவட்ட செயலாளர் எம்.சி.தாமோதரன் கூறுகையில், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அரசியல் நாகரிகமற்ற செயலை செய்துள்ளார். நாங்கள் நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சொல்லுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். விரைவில் அலுவலகத்தை புதுப்பித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் திறப்பு விழா காணப்படும் என்றார்.

Related Stories: