பள்ளி மாணவர்களுக்கு அரிமளத்தில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி

திருமயம், மார்ச் 5: அரசு பள்ளி மாணவர்களிடையே கோரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்போடு இருப்போம், விரட்டுவோம் கொரோனாவை என்ற தலைப்பில் நேற்று முன்தினம் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் ராம்குமார் முதல் பரிசையும், 2ம் பரிசு பாரத்ரத்னா, 3ம் பரிசு ஐஸ்வர்யா ஆகியோர் வென்றனர். ஓவிய ஆசிரியர்கள் ராமச்சந்திரன், பொன்னம்மாள் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் திருப்பதி, ஞானகனி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினார். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: