சென்னை: சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய், முதல்வராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? வெட்கக்கேடு. ‘‘நான் உங்கள் அண்ணன்’’ என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய், முதலில் இப்புகாரை தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை ஏமாற்றிவிட்டார் விஜய்;
நயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘முதல்வர் விஜய், தமிழக விவசாயிகளுக்கு அறிவித்திருந்த விவசாயக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை, முறையாக, நிறைவாக நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், சாலை மறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கடந்த தேர்தலில், விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் கூறியிருந்தார். ஆனால், ரூ.50,000 மதிப்புள்ள பயிர் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றுகிற வித்தை ஆகும். 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு. விவசாயிகளுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறார் முதல்வர் விஜய். தேர்தல் காலத்தில் விஜய், “நான் விவசாயி அல்ல,; இருப்பினும், விவசாயிகளின் ரணத்தை அறிந்தவன்” என்று பேசிவிட்டு, தற்பொழுது ஏமாற்றும் வகையில் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்திருப்பது, நியாயம் இல்லாத, கண்துடைப்பான நடவடிக்கை ஆகும். தேர்தல் வாக்குறுதி பொய்யாகி போய்விட்டது. விவசாயிகளை ஏமாற்றி, கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய்யை நோக்கி விவசாயிகளின் போராட்டம் நிச்சயமாக இருக்கும். விவசாயிகளின் போராட்டமானது அணையாமல் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றதாகும்’’ என்று கூறி உள்ளார்.
