சட்டமன்ற தேர்தலையொட்டி விதிமுறை கடைபிடிப்பதில் அதிகாரிகள் மெத்தனம்

திருவாரூர், மார்ச் 4: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்காமல் இருந்து வருவதால் முறையாக தேர்தல் நடக்குமா என பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியினை கடந்த மாதம் 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உடனே தேர்தல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 2 தினங்கள் கடந்த பின்னரும் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஒரு பணிகளும் துவங்கப்படாது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து அவசர அவசரமாக அலுவலர்கள் கூட்டம், அரசியல் கட்சியினர் கூட்டம் போன்றவற்றினை கலெக்டர் சாந்தா நடத்தினார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்படும் கணக்கில் வராத தொகைகள் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த 1ம் தேதி தான் திருவாரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தனது பணியினை துவக்கினர். இருப்பினும் நேற்று வரையில் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு இடத்திலும் கணக்கில் வராத தொகையோ பரிசு பொருட்களோ பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் இல்லை.

மேலும் அரசு சுவர்களில் அரசியல் கட்சியினரின் சின்னங்கள் அளிக்கும் பணி கூட தாமதமாகத்தான் துவங்கியது. இதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் களாக மாற்றம் செய்யப்படும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று வரையில் தனது பெயர்ப்பலகை கூட கலெக்டர் சாந்தா மாற்றம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அரசு அலுவலகங்களில் இருந்து வரும் முதல்வர் படங்கள் அகற்றப்படும் நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உருவப்படங்களுடன் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் என்ற பெயரில் விளம்பர பதாகை கலெக்டர் அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்காமல் இருந்து வருவதால் சட்டமன்ற தேர்தலானது முறையாக நடக்குமா என்று பொதுமக்களும், வாக்காளர்களும் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Related Stories:

>