டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என தமிழக தரப்பு கூறி வரும் நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவகுமார், “தமிழ்நாடு அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், மேகதாதுவில் நாங்கள் அணை கட்டியே தீருவோம்” என்று உறுதிபட கூறினார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணை திட்ட அறிக்கை அனுமதிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இதற்காக கர்நாடக மக்களின் சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் பேசி இருக்கிறார்.
டி.கே.சிவகுமாரின் இந்த பேச்சுக்கு பல தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்
