செய்துங்கநல்லூர், மே 26: வல்லநாடு 4 வழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் பேரிகார்டர்கள் நிரந்தரமாக வைக்கப்பட்டு உள்ளதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. மேலும் பாலம் முழுவதும் வெடிப்புகள் விழுந்து வருவதால் பெரிய அளவிலான ஆபத்து நிகழும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றன.
அதேபோல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக சென்று திரும்புகின்றன. மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த 4 வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரமாண்டமான பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் திறக்கப்பட்டதில் இருந்தே பலமுறை சேதமடைந்து உள்ளது. இந்த பால விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தை சீரமைக்க ரூ.13.22 ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. முதற்கட்டமாக பாலத்தின் மேல் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பழுது பார்ப்பு பணிக்கு பிறகு பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய 6 மாதத்திற்குள் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து இதுவரை 20 முறை பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி வரும் பாலத்தில் தொடர்ந்து சேதம் ஏற்பட்டு வருவதும், அதனை மறைப்பதற்காக பாலம் முழுவதும் பேரிகார்டர் அமைப்பதுமே நெடுஞ்சாலைத் துறையின் வேலையாக மாறிவிட்டது.
தற்போது பாலம் முழுவதும் நடு மையப் பகுதியில் பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கீறல் விழுந்த இடத்தில் வாகனங்கள் சென்றால் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பேரிகார்டர்கள் வைக்கப்பட்டது, நிரந்தரமாகி விட்டது. இந்த பேரிகார்டர்களால் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன. எனவே பாலத்தில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டர்களை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், வல்லநாடு 4 வழிச்சாலை பாலம் கட்டப்பட்டது முதல் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது.
அவ்வப்போது ஒட்டுபோடும் பணிகள் நடந்தாலும் அடுத்த சில வாரங்களில் அடுத்த பகுதியில் சேதம் ஏற்படுகிறது. தற்போது தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் சாலையில் உள்ள பாலத்தில் வெடிப்புகள் காரணமாக பேரிகார்டர்கள் நிரந்தரமாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த பேரிகார்டர்களால் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எனவே பாலப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வல்லநாடு பாலத்தில் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
