ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் நவீன கழிப்பிடம் திறக்கப்படுமா..?

 

ஊட்டி, மே 26: கழிவுநீர் தொட்டியுடன் இணைக்கப்படாததால் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கட்டி முடித்து பல மாதங்களாகியும் நவீன கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளது. ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவக்கூடிய குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர மாவட்டத்தின் தலைநகரமாக ஊட்டி உள்ளதால் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்களும் வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக நகரின் பல இடங்களில் நவீன கட்டண கழிப்பிடங்கள் உள்ளன.  இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ஊட்டி நகரில் பழுதடைந்த கழிப்பிடங்கள் அகற்றப்பட்டு நவீன கழிப்பிடங்கள் கட்டப்பட்டன.

இதேபோல் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் சாலையோரம் இருந்த பழுதடைந்த கழிப்பிடம் இடித்து அகற்றப்பட்டு ரூ.19.26 லட்சம் மதிப்பில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கழிப்பிடம் கடந்த பல மாதங்களாக திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது, கழிப்பிடத்தில் போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தாமல் இருப்பதும், கழிப்பிடத்தில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் விதமாக பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது.

நகராட்சியின் இந்த மெத்தன போக்கால் ெபாதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது அவசர தேவைகளுக்கு கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் வசதி மற்றும் கழிவுநீர் இணைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: