ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே மூக்குப்பீறி ரயில்வே கேட் மூடலால் மக்கள் அவதி

 

நாசரேத், மே 26: ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே மூக்குப்பீறி ரயில்வே கேட் மூடப்படுவதால் மாணவ- மாணவியர், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெல்லை – திருச்செந்தூர், திருச்செந்தூர்- நெல்லை இடையே பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் நாசரேத் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையம் அருகே மூக்குப்பீறி பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் சாலை வழியாக தினமும் பஸ்கள் தவிர லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவியர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்களும் இவ்வழியாகத் தான் சென்று திரும்புகின்றனர். இந்த ரயில்வே கேட், ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே மூடப்படுவதால் பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மூக்குப்பீறி மின்னல் ஸ்டீபன் கூறுகையில், இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஒரு முக்கியமான சாலையாகும்.

இச்சாலை நாசரேத்தில் இருந்து மூக்குப்பீறி 4 கம்பி வழியாக நாலுமாவடி, குரும்பூருக்கு செல்லும் குறுக்குச்சாலை ஆகும். இந்நிலையில் மூக்குப்பீறி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே மூடப்படுவதால் மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மூக்குப்பீறி ரயில்வே கேட்டை ரயில் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக மூட வேண்டும், என்றார்.

 

Related Stories: