மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

 

கடலூர், மே 26: மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 4 தலைமை காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்ற எஸ்பி ஜெயக்குமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். குவாரிகளை மூடவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் நான்கு இடங்களில் கனிமவளத்துறை அனுமதியுடன் சவுடு மண் குவாரி கடந்த 3 மாதங்களாக இயங்கி வந்தது. இந்த குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு சுமார் 30, 40 மீட்டர் ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதாகவும், இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் புகார் கூறியிருந்தனர்.

இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் அனுமதி இல்லாமல் நூற்றுக்கணக்கான லாரிகளில் இரவு, பகலாக மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் நடந்த சோதனையில், அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி சென்ற 8 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, லாரி டிரைவர் 8 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் பண்ருட்டியில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார். இதில் புதுப்பேட்டை தனிப்பிரிவு ஏட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் படி, புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர்கள் ராஜேஷ், கிருஷ்ணா, தேவகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மீது மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக 4 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்ற எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நடத்திய விசாரணையில், அதிகமான ஆழம் மணல் எடுத்தது தெரிய வந்து 4 மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: