வாய்ச் சவாலும்.! வெற்று சினிமா வசனங்களும் எங்கே போனது..? தமிழகத்தை “ரத்த காடாக” மாற்றி கொண்டிருக்கும் தவெக அரசு – அதிமுக கடும் விமர்சனம்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை பிரதானமாக்கி ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசு பொறுப்பேற்று 15 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் நடைபெறும் கொடூர கொலைகள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல கிரிமினல் சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இதுஒரு பக்கம் இருக்க எதிர்க்கட்சிகள் தவெக அரசில் நடைபெறும் அவலங்களை தோலுரித்து காட்டி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மாநிலத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், அதிமுக சார்பில் தவெக அரசின் திறமையின்மைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “மதுரையின் மையப்பகுதியான மீனாட்சி அம்மன் கோவில் அருகே அதுவும் அரசுக்கு சொந்தமான மாநகராட்சி வளாகத்தில் 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

​பொதுமக்கள் நடமாடும் பகுதியிலேயே அதிகாலையில் இவ்வளவு துணிகரமான கொலை அரங்கேறுகிறது என்றால், குற்றவாளிகளுக்கு இந்த தவெக அரசின் மீதோ காவல்துறையின் மீதோ எள்ளளவாவது பயமிருக்கிறதா?

​விளம்பர மோகத்தில் திளைக்கும் பொய்க்கால் குதிரை அரசே…

​முடங்கி கிடக்கிறதே உங்கள் அரசின் காவல்துறை..!!

பழிக்குப் பழி கொலைகள் அரங்கேறுவதை உளவுத்துறையும் காவல் துறையும் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா?

தேர்தலின் போது வீராவேசமாக பேசிய உங்கள்​ வெற்று முழக்கங்கள் தற்போது எங்கே போனது? மேடைகளில் வாய்ச் சவாலும் வெற்று சினிமா வசனங்களும் பேசத் தெரிந்த உங்களுக்கு, மக்களின் உயிரை காக்க முடியவில்லையே?

​விளம்பர அரசியலை மட்டுமே முதலீடாக வைத்து தமிழகத்தை ரத்தக் காடாக மாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசின் முதல்வர் இதற்கு என்ன பதிலளிக்க போகிறார்? இனிமேலும் இந்த அரசு மெத்தனப் போக்கோடு செயல்படாமல் தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான தக்க நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.. முன்வருமா?” என்று கடுமையாக சாடப்பட்டுள்ளது.

 

Related Stories: