சென்னை: திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு நமக்கு வந்திருக்கிறது. முதலில் நமக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்த அந்தத் தேர்தல் முடிவு, நாளாக நாளாக இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் தேர்தல் களத்தில் தோற்றிருக்கலாம், ஆனால், திமுவிற்க்கான மரியாதை பல மடங்கு கூடியிருக்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், தேர்தல் முடிந்த உடனே, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனே, 4ம் தேதி இரவு, வெற்றி வாய்ப்பைப் பெற்ற நம் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சென்னைக்கு வருவதற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். ரயில், பேருந்து, விமானத்தில் இதற்கான பயணச்சீட்டெல்லாம் முன்பதிவு செய்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால் இன்று இருக்கக்கூடிய ஆளுங்கட்சியும், பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் திருட்டுத்தனமாகப் போய் தங்குவதற்கு விடுதிகளில் (ரிசார்ட்டில்) அறை முன்பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். இதுதான் திமுகவுக்கும், மற்ற கட்சிகளுக்குமான வித்தியாசம். தமிழ்நாட்டில் என்றைக்குமே, எப்பொழுதுமே, `ரிசார்ட் பாலிடிக்ஸ்’ செய்யாத ஒரே இயக்கம் திமுக, என்கிற பெருமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.
நம் கூட்டணியில் இருந்த சில கட்சிகள், நம் தலைவரிடம் வந்து, தலைவரின் உத்தரவு பெற்று, அனுமதியைப் பெற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், 20 வருடத்துக்கு மேல் நம் முதுகின் மேல் ஏறி நின்று, நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி, இன்று நம் முதுகில் குத்திவிட்டுப் போயிருக்கிறது.
இதை யாரும் மறந்துவிடாதீர்கள். இந்தியாவில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு நான் கூட மோடியும், அமித்ஷாவும் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், காங்கிரஸ் கட்சி தான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்பது இப்பொழுது தெரிகிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் சுமந்து கொண்டு இருந்தோம்.
மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும், பாஜகவைத் தமிழ்நாட்டுக்குள் விட்டுவிடக் கூடாது என்று நம் தொண்டர்கள், நாம் ரத்தத்தையும், வேர்வையையும் சிந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துக் கொண்டு இருந்தோம். இந்தத் தேர்தலிலும் அதைத் தான் செய்தோம். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி, இன்று ஐந்து இடத்தில் ஜெயிக்க நம் உடன்பிறப்புகள், தலைவரின் தொண்டர்கள், திமுக காரன் தான் காரணம்.
இன்று தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் போட்ட ஓட்டில் ஜெயித்துவிட்டு, பதவிக்காகச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டார்கள். குறைந்த பட்சம் ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை, இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக்கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அவர்களை கிட்டே சேர்க்கக் கூடாது. அவர்களுக்குச் சரியான பாடத்தை, நாம் கற்றுக் கொடுக்கிறோமோ இல்லையோ தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வெகு விரைவில் கற்றுக் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
