தவெக அரசு வெற்று விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்: திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக அரசு வெற்று விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம்:
ஆட்சிப் பொறுப்பேற்ற 13 நாளில் தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திடுக!!!

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்த கழக அரசு மீது விஷமப் பிரசாரங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து, சேற்றை வாரி வீசியவர்கள் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன..

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். வந்தவாசியில், ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

படப்பை அருகே இரட்டைக் கொலை. தூத்துக்குடியில் மது தகராறில் கொலை. சேலத்தில் மாணவர் அடித்துக் கொலை. மணலி புதுநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வெட்டி படுகொலை.விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை எனக் குற்றப் பட்டியல் நீள்கிறது.

பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து இன்று தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தறிகெட்ட செய்திகள் வருகின்றன.
ஆனால், முதலமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார், பொலிரோ கார் ஓட்டிப் பார்த்தார், பேட்டரி காரில் பவனி வந்தார் என்ற ரீல்ஸ்களால் இவற்றைத் திசை திருப்ப பார்க்கிறார்கள்.

இந்த வெற்று விளம்பர நடவடிக்கைகளுக்குப் பதிலாக முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும் எனவும் தி.மு.க. இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் வலியுறுத்துகிறது.

Related Stories: