வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி தலைவர் வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மிகத் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவத் துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய அசாதாரணமான சூழலில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடும் வெப்ப நிலையை சிறுவர், சிறுமியர் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வது அவர்களின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு வார கால நீட்டிப்பு மாணவர்களின் கல்விப் பாதையில் எவ்வித தொய்வையும் ஏற்படுத்தாது என்பதால், முதல்வர் விஜய் இதில் உடனடியாக தலையிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: