குஜிலியம்பாறை அருகே காரை கவிழ்த்த ஜல்லி கற்கள் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

குஜிலியம்பாறை, மார்ச் 3:குஜிலியம்பாறை அருகே மல்லப்புரம்- ஈசநத்தம் வழித்தடத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஜல்லி கற்கள் பரப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே டூவீலர், கார் ஓட்டி செல்பவர்கள் நிலை தடுமாறுகின்றனர். குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோட்டை சேர்ந்த வடிவேல் (38). அரசு பஸ் கண்டக்டர் இவர் நேற்று முன்தினம் மதியம் காரில் ஆர்.வெள்ளோட்டில் இருந்து மல்லப்புரம் வழியே குஜிலியம்பாறை நோக்கி சென்றார். அப்போது மல்லப்புரம் ஜல்லி பரத்தப்பட்ட சாலையில் கார் சென்ற போது நிலைதடுமாறி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து காரில் இருந்த வடிவேலை மீட்டனர். பின்னர் குஜிலியம்பாறை 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்காக குஜிலியம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக வடிவேல் உயிர் தப்பினார். மல்லப்புரம்- ஈசநத்தம் பரப்பி கிடக்கும் ஜல்லி கற்களால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பாக சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: