கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் வர மறுக்கும் அரசு பேருந்துகள் மாணவர்கள் பொதுமக்கள் அவதி

சாயல்குடி, மார்ச் 3:  கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வராமல் சாலை மார்க்கமாகவே வந்து, செல்வதால் அவதிப்படுவதாக மாணவர்கள்,பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி மற்றும் அருகிலுள்ள கருங்குளம், மங்களம் பஞ்சாயத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடலாடி, தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்கு யூனியன் அலுவலகம், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. கடலாடியை சுற்றி கிராமங்கள் அதிகமாக இருப்பதால் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மற்ற பணிகளுக்காகவும் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வருகின்றனர்.

இதுபோன்று கடலாடி அரசு கல்லூரி மற்றும் அரசு மேல்நிலை பள்ளியில் படிப்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவர்களும் வந்து செல்கின்றனர். இதனை போன்று ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், கோவை, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கும் பெரும்பாலும் பஸ் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ் ஏறி செல்வதற்கு கடலாடி பஸ் ஸ்டாண்டிற்கு

 வந்து செல்கின்றனர். ஆனால் கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் பெரும்பாலான பஸ்கள் வருவது கிடையாது. இரவு நேரத்தில் ஒரு பஸ் கூட கிடையாது.

முதுகுளத்தூர், சாயல்குடி சாலையிலுள்ள கடலாடி தேவர் சிலை அருகே பஸ்ஸை நிறுத்தி செல்வதால் பொதுமக்கள் அங்கு சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.

முதியவர்கள், பெண்கள், படிக்கதெரியாதவர்கள் பஸ் வரும் என வராத பஸ்ஸிற்காக பஸ் ஸ்டாண்டிற்குள் காத்து கிடக்கின்றனர். பகல் நேரத்தில் கடும் வெயிலிலும், இரவு நேரத்தில் பனியிலும் நிற்கும் அவலம் இருப்பதாக புகார் கூறுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் எல்லா நேரத்திலும் கடலாடி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம், முதுகுளத்தூர் போக்குவரத்து கிளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: