நெல்லை: நெல்லை அருகே போலீஸ் சோதனைச் சாவடி மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தகவலை மறைத்த 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம், மானூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் முன்பு கடந்த 18ம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அங்கு பணியில் இருந்த காவலர்களும், உளவுத்துறை போலீஸ்காரரும் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தப்பிச் சென்ற சிறுவர்களைப் பிடித்த பிறகே தாமதமாக சம்பவம் நடந்த மறுநாள் மானூர் போலீஸ் நிலையத்தில் வெடிபொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிடிபட்ட சிறுவர்கள் 3 பேரை போலீசார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். போலீசாருக்கு உடனடியாக தகவலை தெரிவிக்காமல் மறைத்த சுடலைக்கண்ணு, ஆனந்தபாண்டியன், அந்தோணி ஆகிய 3 போலீசாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி பிரசன்னகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல நெல்லை, மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள், போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள், கைது உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காா போலீஸ்காரர் ஒருவரை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
* சமூகவலைதளங்களில் ஒழுங்கீனமாக ஆடியோ: பெண் எஸ்ஐ-ஏட்டு இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலைய பெண் எஸ்ஐ அருள்நிதி. இதே ஸ்டேஷனில் தனிப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்தவர் விக்னேஷ். 2 பேரும் சரிவர பணி மேற்கொள்ளாமலும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மேற்ெகாண்டுள்ளனர். இது எஸ்ஐ அருள்நிதியின் கணவர் மூலம் உயரதிகாரிகளுக்கு புகாராக சென்றது.
இதையடுத்து துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. இதைத் தொடர்ந்து பெண் எஸ்ஐ அருள்நிதியை, தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கும், தனிப்பிரிவு ஏட்டு விக்னேசை மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றி, தூத்துக்குடி எஸ்பி (பொறுப்பு) விஜயகுமார் உத்தரவிட்டார்.
