சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை. திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்போம். ஒப்புதல் அளித்த பின், உடனே பூமி பூஜை நடக்கும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. காவிரியில் நீரை தடுத்து, ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். கர்நாடகா, நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளார். இதேபோல் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
