பெண் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு; தேவகோட்டையில் 2 இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட்: தென்மண்டல ஐஜி அதிரடி

 

தேவகோட்டை: பெண் அளித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்தது தொடர்பாக தேவகோட்டையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்ஐக்கள் உள்பட 5 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 19ம் தேதி தேவகோட்டை சம்பந்தர் தெருவில் இருந்து, வெள்ளையன் ஊரணி தென்கரை பகுதியில் உள்ள ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கு ஆட்டோவில் சென்றார். காரைக்குடியைச் சேர்ந்த மாதவன் (50) ஆட்டோவை ஓட்டினார். ஆட்டோவை வழக்கமான பாதையில் இயக்காமல், குறுகிய சந்து வழியாக இயக்கியுள்ளார்.

அப்போது, ஆட்டோவில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக அப்பெண் அன்றே தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் துரைராஜ், தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அவர், மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கீதாலெட்சுமி புகார் மனுவை வாங்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணை திருப்பி அனுப்பி விட்டார்.

இதுபற்றி அப்பெண் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரிக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஐஜி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் மாதவனை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் பாலியல் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை அலைக்கழித்தது தொடர்பாக தேவகோட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, எஸ்ஐகள் ராஜேஸ்வரி, ஜெயா, நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் துரைராஜ், தனிப்பிரிவு காவலர் சந்தானம் ஆகிய 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: