சென்னை: சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நாகப்பட்டினம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்த திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியி மற்றும் தமுமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தலைமை நிர்வாக குழு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு வாழ்த்துகளை இந்நிர்வாக குழு தெரிவிக்கிறது. புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டுமென்றும் முந்தைய திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை தொடர வேண்டுமென்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டுமென்றும் இந்நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
மனிதநேய மக்கள் கட்சி இனி வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று தீர்மானிக்கபட்டது.
