கோவையில் பைக்கில் கடத்திச்சென்று துணிகரம்; 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொடூர கொலை: போலீஸ் குவிப்பால் பதற்றம்

 

* குளத்தில் சடலத்தை வீசிச்சென்ற காமக்கொடூரன்
* உடலை வாங்க மறுத்து காவல் நிலையம் முற்றுகை

சூலூர்: கோவையில் 5ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்று குளத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது பள்ளபாளையம். இங்குள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளி தம்பதி. இத்தம்பதிக்கு 10 வயது மகள் உண்டு. இவர்கள் குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் போத்தனூரில் இருந்து இங்கு குடியேறினர். தம்பதியின் மகள் போத்தனூர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அங்கிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வந்த நிலையில் ஐந்தாம் வகுப்பிற்கு கண்ணம்பாளையம் பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில், மாணவி நேற்று முன்தினம் 21ம் தேதி இரவு 7 மணி அளவில் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஒரு வாலிபர், மாணவியை பைக்கில் ஏற்றிச்சென்றதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது மாணவியை கடத்தியது அதே பகுதியில் வசிக்கும் தொழிலாளி கார்த்திக் (33) என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

தீவிர விசாரணையில் அவர் மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்து கொன்று விட்டதாகவும், உடலை வீட்டில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள கண்ணம்பாளையம் குளத்தில் வீசி விட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மாணவியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்பி மற்றும் டிஐஜி சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்று வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பல் வெறிச்செயலா?
மாணவியை, கார்த்திக் தான் பலாத்காரம் செய்து கொன்று வீசினாரா? அல்லது கும்பலே இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவினர் சடலத்தை தொடாமல் பாதுகாப்புடன் எடுத்துவரும்படி கூறினர். அதன்படி, மாணவியின் சடலத்தை போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலை பெற்றோரிடம் காட்டாமல் கொண்டு செல்வதாக பெற்றோர் கதறி அழுது குற்றம் சாட்டினர். இதனையடுத்து காவல் நிலையம் முன் பெற்றோர், உறவினர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: