இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் மீனவர்கள் மறியல்: ஒன்றிய, தமிழக அரசுகளை கண்டித்து கோஷம்

 

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய, தமிழக அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 22ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் கபில் ரோச்சர், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ் ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகர்சன், பெரிய கருப்பன் ஆகிய 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களை சிறையில் இருந்து மீட்ககோரி மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தனர்.மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு 88 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அவர்கள் விடுதலைக்கு எந்த நடவடிக்கையும் நடக்கவில்லை. இதையெடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிறுத்தம் முன்பு பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.
ராமேஸ்வரம் – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 12 பேரையும் மீட்டு வர ஒன்றிய, தமிழக அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளுடன் கலந்து கொண்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்தப் போராட்டத்தில் பாம்பன் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ சங்கம், ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், மீனவ அமைப்புகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. ஏஎஸ்பி மீரா மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

தமிழக அமைச்சர் ராஜீவ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மீனவர்கள் சிறையில் வாடும் பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒன்றிய அரசின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Related Stories: