சென்னை: தவெக அரசு தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டியை முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக நியமித்துள்ளது. ஏற்கனவே ஜோதிடர் நியமன சர்ச்சை வெடித்த நிலையில் புதிய ஆலோசகர் நியமனம் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் விஜய்யின் ஆலோசகர் நியமனங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தேர்தல் வியூக நிபுணர்களாக அறியப்படும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதல்வரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதாக கடந்த மே 12ம் தேதி தகவல் வெளியானது. தமிழக அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், ஜோதிடருக்கு அரசு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களிலும் இந்த நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்கு பின்னர் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்த சர்ச்சை அடங்காத சூழலிலேயே தற்போது புதிய ஆலோசகர் நியமனம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, தவெக அரசின் தேர்தல் ஆலோசகராகவும், அரசியல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நிர்வாகம், கொள்கை மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகராக விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன. தேர்தல் வியூக நிபுணர்களுக்கு தமிழக அரசு அமைப்பில் அதிகாரப்பூர்வ பங்கு வழங்கப்படுவது எந்தளவிற்கு நியாயம் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.
