அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனத்தில் கடும் இழுபறி; தவெக அரசில் 4 பவர் சென்டர்கள்: முடிவெடுப்பதில் சிரமப்படும் அதிகாரிகள்

 

சென்னை: தவெக அரசில் தற்போது 4 பவர் சென்டர்கள் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பவர் சென்டர்கள் மூலமாகவே அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் நடைபெற்றுள்ளது. இதனால் முடிவெடுப்பதிலும், அதை அமல்படுத்துவதிலும் கடும் குழப்பம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி ஏற்பட்டு ஆட்சியை அமைத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. 10ம் தேதிதான் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

பதவி ஏற்கும்போது 9 அமைச்சர்கள் மட்டுமே பதவி ஏற்றனர். அதன்பின்னர் கடந்த 21ம் தேதி 2வது முறையாக பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது 23 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். காங்கிரசை சேர்ந்த 2 பேர் பதவி ஏற்றனர். பின்னர் நேற்று விசிக, ஐயுஎம்எல் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் என விஜய்யையும் சேர்த்து மொத்தம் 35 பேர் பதவி ஏற்றுள்ளனர். அமைச்சர்கள் நியமனத்தில் கடுமையான குழப்பம் நிலவியதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நியமனத்திலும் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் 4 பேர் பவர் சென்டர்களாக இருப்பதுதான்.

விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி என 4 பேர் பவர் சென்டர்களாக உள்ளனர். இவர்கள் நான்கு பேர் மூலமாகத்தான் பலர் அமைச்சர் பதவியை பிடித்துள்ளனர். குறிப்பாக வேட்பாளர் தேர்விலும் இந்த மோதல் எதிரொலித்துள்ளது. இந்த 4 பவர் சென்டர் தவிர, செங்கோட்டையன் தனியாக ஒரு ரூட் போட்டு இந்த 4 பவர் சென்டர்களிடம் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளாராம். வேட்பாளர் தேர்வை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர்தான் செய்துள்ளனர். இந்தப் பட்டியல் ஜான் ஆரோக்கியசாமியிடம் சென்றுள்ளது. அவர் சில மாற்றங்களை செய்துள்ளார். கடைசியாக விஜய்யிடம் சென்றுள்ளது. அவரும் சில வேட்பாளர்களை மாற்றியுள்ளார்.

இதேபோலத்தான் அமைச்சரவை நியமனத்திலும், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர்தான் அமைச்சர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான இலாகாக்களை தேர்வு செய்துள்ளனர். பின்னர் இந்தப் பட்டியல் விஜய் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஜான் ஆரோக்கியசாமியிடம் பேசி, பட்டியலை இறுதி செய்துள்ளார். இறுதி செய்த பட்டியல்தான் கடைசியாக புஸ்ஸி ஆனந்திடம் வழங்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தயாரித்த அமைச்சரவை பட்டியல், விஜய்யிடம் சென்ற பின்னர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால் அமைச்சராகப் போகிறவர்களிடம் விஜய்யே போன் செய்து பேசி, ஏதோ தான் மட்டுமே பட்டியல் தயாரித்ததுபோல அவர்களிடம் பேசியுள்ளார்.

ஆனால், அவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி மூலம் பதவி ெபற்றது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவர்களும் விஜய் மட்டுமே பதவி கொடுத்துபோல நடித்துள்ளனர். அதாவது நடிகனிடமே அமைச்சர்கள் நடித்துள்ளனர். அதேபோல இலாகா விவகாரத்திலும் அப்படியே நடந்துள்ளது. அதில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆகியோர் அமைச்சர்களாகிவிட்டாலும், ஜான் ஆரோக்கியசாமி அமைச்சராகவில்லை. ஆனால் அவர் அமைச்சரவையில் நடப்பது தெரிந்து கொள்வதற்காக தன்னுடைய ஆளாக நிர்மல்குமாரை நியமித்துள்ளாராம். இந்த 4 பவர் சென்டர்கள், அதிகாரிகள் நியமனத்திலும் முடிவுகளை எடுக்கிறார்களாம். தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்களில் தலைமைச் செயலாளர் சாய்குமார், ஜூலை மாதத்தில் ஓய்வு பெறுகிறார். இதனால் அதுவரை தான் தலைமைச் செயலாளராக இருக்கிறேன் என்று விஜய்யிடம் கூறியுள்ளார்.

அதை அவரும் ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தைப் பொறுத்தவரை தலைமைச் செயலாளர் சாய்குமார், மாறுதல் பட்டியலை தயாரித்து முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டோ அல்லது அப்படியேவாகவோ பைல் வருகிறது. ஆனால் முதல்வரின் அலுவலகம் செல்லும் பைல் 3 நாட்களுக்குப் பிறகுதான் தலைமைச் செயலகத்துக்கு திரும்பி வருகிறதாம். சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜூம், விஜய்யும் ஒரே சர்ச்சுக்கு செல்கிறவர்கள். இதனால் அந்த சர்ச் பங்கு தந்தை கூறியதால் நேரடியாக விஜய்யே தேர்வு செய்தாராம்.

ஆனால் மற்ற பதவிகளைப் பொறுத்தவரை ஆளாளுக்கு பரிந்துரை செய்கிறார்களாம். கடைசியில் விஜய் முடிவு செய்கிறாராம். ஆனால் பதவி ஏற்பு விழாவில், இந்த ஆட்சியைப் பொறுத்தவரை ஒரே பவர் சென்டர் தான் மட்டுமே என்றார். ஆனால் அப்படி இல்லை என்கின்றனர் அதிகாரிகள். சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜின் பைல் கடந்த திங்கட்கிழமையே முதல்வர் அலுவலகம் சென்றதாம். ஆனால் வியாழக்கிழமைதான் பைலுக்கு விஜய் ஒப்புதல் கொடுத்ததை உதாரணமாக கூறுகின்றனர். பைல்கள் தாமதமாவதோடு முடிவுகளையும் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்களாம்.

தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெறவில்லை, செயலாளர்கள் மாற்றம் நடைபெறவில்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த காலதாமதம்தான் என்கின்றனர் அதிகாரிகள். இதே நிலைமை நீடித்தால், ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான நிலைக்கு விஜய் ஆட்சி செல்லும் என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

Related Stories: