தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா? அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

வேலூர், மார்ச் 3: சமூக வலைதளங்களில் வெளியாகும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழுவின் அனுமதி அவசியம் என்று நேற்று நடந்த அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் தொலைக்காட்சி சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரம் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்திபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொலைக்காட்சி சேனல்கள் கேபிள் டிவி சேனல்கள் ரேடியோ தனியார் எப்எம் சேனல்கள், திரையரங்குகள் இ-பேப்பர் பொது இடங்களில் திரையிடப்படும் ஒலி, ஒளி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவை அனைத்தும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடவும், ஒளிபரப்பவும் விரும்பும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மேற்கண்ட குழுவின் மூலமாக முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே அவற்றை வெளியிட வேண்டும். தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளால் மக்களுக்கு அனுப்பப்படும் ஒட்டுமொத்த எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் ஆகியவை அனைத்தும் இக்குழுவின் மூலமாக முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட வேண்டும்.

செய்தித்தாள்களின் மின்னணு வடிவிலான இ பேப்பர் கடையில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான பிரச்சார விளம்பரங்கள் அனைத்தும் குழுவின் மூலமாக சான்றளிக்கப்பட்ட பின்னரே வெளியிட வேண்டும்.  ஏப்ரல் 5 மற்றும் 6ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் எந்த பத்திரிக்கையும் தேர்தல் விளம்பரம் செய்யப்பட வேண்டுமாயின் குழுவினரின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் மற்ற நாட்களில் பத்திரிகையில் விளம்பரம் செய்ய அனுமதி பெற அவசியம் இல்லை வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலமாகவோ செய்யும் விளம்பரங்கள் அனைத்தும் மேற்கூறிய குழுவின் அனுமதி பெற்றுள்ளன கண்காணிக்கப்படும். விளம்பரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு செலுத்தப்படும் கட்டணமானது காசோலையாகவோ அல்லது வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்த வேண்டும் என வாக்குமூலம் தர வேண்டும். இக்குழுவின் உத்தரவானது திருப்திகரமாக இல்லை எனில் மாநில அளவிலான ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவில் மேல்முறையீடு செய்து கொள்ள வழிவகை உள்ளது.

தொடர்ந்து பொதுக்கூட்டங்கள், வாக்குசேகரிப்பு ஊர்வலங்கள் என அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் மேற்கொள்ளும் பொதுக்கூட்ட செலவினங்கள், வாகனங்களுக்கான செலவினங்கள், உணவு செலவினங்கள், ஒலி, ஒளிபரப்பு செலவினங்கள், பேனர்கள், நோட்டீஸ்கள், சுவரொட்டிகள், டிவி சேனல் விளம்பரங்கள், ரேடியோ விளம்பரங்கள் என அனைத்துக்கும் அரசு நிர்ணயித்த வாடகை கட்டணங்கள், விலை, விளம்பர கட்டணங்கள், ஒலி, ஒளிபரப்பு கட்டணங்களை தாண்டி செலவினத்தில் சேர்க்கக்கூடாது என்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் வலியுறுத்தினார்.

Related Stories:

>