தனியார் மருத்துவமனைக்கு இணையாக செயல்படும் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பாராட்டு

பேராவூரணி, மார்ச் 3: செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகரான மருத்துவ சேவை வழங்கப்படுவதால் பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது. பேராவூரணி அடுத்துள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைந்தால் தனியார் மருத்துவ மனைகளுக்குரிய கட்டமைப்பு வசதிகளோடு அழகாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பரந்த நிலப்பரப்பில் காய்கறி தோட்டம் போட்டு பராமரிக்கப்பட்டு இயற்கை முறையில் ரசாயன உரங்கள் இடாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகள் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பசுமாடு, நாட்டுக்கோழி வளர்த்து பால், முட்டைகளை கர்ப்பிணிகளுக்கு வழங்குவது, உள்ளிட்ட சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.இதனால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மருத்துவ சேவைக்காக தினசரி வந்து செல்கின்றனர். மருத்துவ மனைக்கு குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா, வயதானவர்களுக்கு வீடுதேடி சென்று மருத்துவம் பார்ப்பது என வித்தியாசமான அனுகுமுறையால் ஐஎஸ்ஓ 2001 தரச்சான்றும் பெற்றுள்ளது.

சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஏராளமான பிரசவங்கள் நடக்கும் இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மயக்க மருந்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சாதாரண ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிரமப்பட்டுவந்தனர். இந்நிலையில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட நாட்களில், மயக்க மருந்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில், மயக்க மருத்துவர் சங்கர் பாபு, டாக்டர்கள் தீபா, ரஞ்சித், அறிவானந்தம், வெங்கடேசன், கோகிலம் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை தொடங்கிய 1 மாதத்திற்குள் 5 பேருக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்து தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர்.

பணம் விரயம் செய்ய வேண்டாம்

வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் கூறியது, தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவில், செய்யப்படும், பிரசவ அறுவை சிகிச்சை செருவாவிடுதி சுகாதார நிலையத்தில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் செய்யப்படுகிறது.தொடங்கப்பட்டு ஒரு மாத காலத்தில் இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். கர்ப்பிணி தாய்மார்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பணத்தை விரயம் செய்யாமல் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories:

>