தேர்தல் நடத்தை விதிமுறை தீவிரமாக கண்காணிப்பு

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி கூறினார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் எல்இடி தொலைக்காட்சிகள், வீடியோ பதிவு கருவி, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தேர்தல் குறித்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் மற்றும் ஏதேனும் விதிமீறல்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் விவரங்கள் குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 04322-221627 என்ற தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். எனவே இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: