- ஹைதராபாத் நீர் வழங்கல் வாரியம்
- திருமலா
- அனந்தலட்சுமி குமார்
- ரெட்ஹில்ஸ்
- ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்
- தெலுங்கானா
- ஊழல் பிரிவு
- குமார்
திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் ரெட்ஹில்ஸ் பிரிவின் பொதுமேலாளராக பணிபுரிந்து வருபவர் அனந்தலட்சுமி குமார். ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் குமாரின் வீடு, அலுவலகம் உள்பட 8 இடங்களில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். மல்லாபூரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது பினாமிகளின் வீடுகளிலும் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. முதற்கட்ட விசாரணையில் அனந்தலட்சுமி குமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளது கண்டறியப்பட்டது. மல்லாபூரில் உள்ள குமாரின் வீட்டில் இருந்து சுமார் ரூ. 1.10 கோடி ரொக்கம், 2.1 கிலோ தங்க நகைகள், 9.2 கிலோ வெள்ளிப்பொருட்கள் பதுக்கியது தெரிய வந்தது.
மேலும் குமாரின் மனைவி பெயரில் இருந்த வங்கி லாக்கரை திறந்து பார்த்தபோது பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், தங்க நகைகளும் இருந்தது. இவை அனைத்தையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். நிஜாமாபாத் மற்றும் சங்கரெட்டியில் உள்ள வீட்டுவசதி திட்டங்களில் அனந்தலட்சுமிகுமார் 3 அடுக்குமாடி குடியிருப்புகள், 6 வீட்டுமனைகள், ஒரு ஆடம்பர வீடு மற்றும் 18 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளதும் தெரிய வந்தது. அவரது வீட்டில் ஒரு சொகுசு காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டன. அனந்தலட்சுமி குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
