- திரிணாமுல்
- ஐபிஎஸ்
- புஷ்பா
- கொல்கத்தா
- மேற்கு வங்கம்
- பால்டா
- திரிணாமூல் காங்கிரஸ்
- ஜஹாங்கீர் கான்
- சட்டசபை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா தொகுதிக்கான மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் திடீரென போட்டியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக சின்னங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது.
இத்தொகுதியில் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேச ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவுக்கு எதிராக, தன்னை ‘புஷ்பா’ என்று அடையாளப்படுத்திக் கொண்ட திரிணாமுல் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் மிரட்டல் பேச்சு கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இருப்பினும், நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திடீரென ஜஹாங்கீர் கான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது, திரிணாமுல் கட்சியினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலகல் குறித்து ஜஹாங்கீர் கான் கூறுகையில், ‘நான் ஃபால்டாவின் மகன், என் பகுதி வளர்ச்சி அடைய வேண்டும். முதல்வர் சுவேந்து அதிகாரி இத்தொகுதிக்கு சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதால், நான் போட்டியிலிருந்து விலக முடிவு செய்தேன்’ என்று வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக தரப்போ, அவருக்கு வாக்குச்சாவடி முகவர்களைக் கூட நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தான் அவர் பயந்து ஓடிவிட்டார் என்று விமர்சித்துள்ளது.
கடந்த காலங்களில் இத்தொகுதியில் ஜஹாங்கீர் கான் மீது கொலை முயற்சி மற்றும் வன்முறையைத் தூண்டியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு ஆதரவாக திரிணாமுல் முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரத்திற்கு வராததும், அவர் தனிமைப்படுத்தப்பட்டதும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இத்தொகுதி அபிஷேக் பானர்ஜியின் அரசியல் செல்வாக்கு மிக்கப் பகுதியாகக் கருதப்படும் நிலையில், தோல்வியைத் தவிர்க்கவே திரிணாமுல் காங்கிரஸ் இத்தகைய வியூகத்தைக் கையாண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
