×

உலகளவில் சுட்டெரிக்கும் நகரங்கள் பட்டியல்: உபியின் பண்டா நகருக்கு முதலிடம்

 

புதுடெல்லி: சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இந்தியா தொடர்ந்து சிக்கித் தவிக்கும் வேளையில்,உபி மாநிலத்தில் உள்ள பண்டா, கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை உலகின் வெப்பமான நகரமாக உருவெடுத்துள்ளது. இந்தியா தற்போது நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகிறது. உபியில் தொடர்ந்து இடைவிடாத வெப்ப அலை வீசுகிறது. நேற்றுமுன்தினம் பண்டாவில் 48.2 டிகிரி செல்சியஸ் சுட்டெரிக்கும் வெப்பநிலை பதிவானதால், உலகின் மிகவும் வெப்பமான நகரமாக அது மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 27ம் தேதி 47.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உலகின் அதிக வெப்பமான நகரமாக பண்டா உருவெடுத்தது. அதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பண்டாவில் வெப்பநிலை அதிகளவாக 49.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு துறையின் விஞ்ஞானி முகமது டேனிஷ் கூறுகையில், பந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள கடினமான கற்கள் நிறைந்த மேற்பரப்பு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. திறந்தவெளி பாறை நிலப்பரப்பு வெப்பத்தை விரைவாக உறிஞ்சி, மெதுவாக வெளியிடுகிறது. பண்டா மாவட்டத்தில் நடைபெறும் பெரிய அளவிலான மணல் கடத்தலும், ஆற்றில் நீர்வரத்து குறைந்ததுமே இதற்கு காரணமாகும் என்றார். கடும் வெப்பஅலை தாக்கம் காரணமாக உலகின் அதிக வெப்பமான நகரங்களின் பட்டியலிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவின் வெப்ப நகரங்கள்
உலகளவில் அதிக வெப்பம் பதிவாகும் முதல் 100 நகரங்களின் பட்டியலில் சுமார் 95 முதல் 98 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. மத்திய, மேற்கு மற்றும் வட இந்தியாவில் வீசும் கடுமையான வெப்ப அலைகளால் இத்தகைய வெப்பநிலை காணப்படுகிறது. உபி மாநிலம்,பண்டா மட்டுமில்லாமல் பதேப்பூர், எட்டாவா ஆகிய நகரங்களும் தீவிர வெப்ப அலையின் மையங்களாக விளங்கி 46 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளன.

அதே போல் ராஜஸ்தானின் கோட்டா, பிகானீர், ஜெய்சால்மர் போன்ற நகரங்கள் தொடர்ந்து 44 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளன.
சட்டீஸ்கரின், ராய்ப்பூர், மகாராஷ்டிராவின் நாக்பூர், வட இந்திய பகுதிகளான ஆக்ரா, லூதியானா ஆகிய நகரங்களும் உலகின் மிக வெப்பமான இடங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன.

Tags : New Delhi ,India ,Banda ,UP ,
× RELATED ‘புஷ்பா’ எனக்கூறி ஐபிஎஸ் அதிகாரிக்கு...