புதுடெல்லி: தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இதையடுத்து கடந்த 4ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக, அதிமுக, தவெ.க ஆகிய யாருக்கும் ஆட்சி அமைக்கும் விதமாக தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அதிக தொகுதிகளை அதாவது 107 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப்பெற்ற த.வெ.கவுக்கு, விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐ.யு,எம்.எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததின் அடிப்படையில் த.வெ.க தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. முதல்வராக விஜய் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், ஆளுநரின் உத்தரவுப்படி கடந்த 13ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுகவினர் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தவெக அரசு தனது பெரும்பான்மையை உறுதி செய்தது. இருப்பினும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினருக்கு ஆதரவு அளிக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர் சர்ச்சையாகவும் நீடித்து வருகிறது.
இதுபோன்ற சூழலில் வழக்கறிஞர் யாஷிகா ஆனந்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற த.வெ.க கட்சி சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது பல்வேறு ஊழல் மற்றும் ஒழுங்கற்ற தன்மைகள் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக அதிமுகவின் ஒரு பிரிவினருக்கு உட்பட பிற கட்சியினர் வாக்களிக்க அமைச்சர் பதவி தருவதாகவும், அதேப்போன்று ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் கோடிகள் அளவுக்கு டெண்டர் வழங்குவதாகவும் லஞ்சமாக பேசப்பட்டுள்ளது. அதாவது குதிரை பேரம் நடத்தியே இத்தனை உறுப்பினர்களின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ளது.
அதனால் இவ்வாறு முறைகேடாகவும், குதிரை பேரம் நடத்தியும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதால் தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த விவிவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேப்போன்று இந்த வழக்கில் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
