வசவப்பபுரம், முறப்பநாட்டில் ஆமை வேகத்தில் 4 வழிச்சாலை பாலப்பணி

 

செய்துங்கநல்லூர், மே 20: வசவப்பபுரம், முறப்பநாட்டில் ஆமை வேகத்தில் 4 வழிச்சாலை பாலப்பணிநடைபெறுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை – தூத்துக்குடி இடையே 4 வழிச்சாலை பணிகள், கடந்த 2012ம் ஆண்டு நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த 4 வழிச்சாலை பகுதியில் முக்கிய கிராம சந்திப்புகளில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து விபத்துகளை குறைக்கும் வகையில், நெல்லை -தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியான வசவப்பபுரம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ள முறப்பநாடு, வாகைக்குளம் டோல்கேட்- புதுக்கோட்டை பாலம் இடையேயான பகுதி, கோரம்பள்ளம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் பாலங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பணிகள் நடந்து வருகிறது.

இதில் வசவப்பபுரம் சந்திப்பு சென்னல்பட்டி, மருதூர் அணை, அனவரதநல்லூர், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட கிராமங்களின் சாலை சந்திப்பு பகுதியாக அமைந்துள்ளது. பாலப் பணிகள் நடைபெறும் இடங்களில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சர்வீஸ் சாலை, டேக் டைவர்ஷன் பதாகைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தாலும் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணிகளால் வாகனஓட்டிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கட்டப்படும் பாலப்பணி 75% முடிவடைந்துள்ளது.

ஆனால் வசவப்பபுரம், முறப்பநாடு- பக்கப்பட்டி பகுதிகளில் கட்டப்படும் பாலப்பணிகள் தொடங்கப்பட்டு இதுவரையிலும் 25 சதவிகித பணிகள் கூட நடைபெறவில்லை. இங்குள்ள சர்வீஸ் சாலையிலும் முறப்பநாட்டில் 2 இடங்களில் பெரும் குழிகள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறியே செல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி 4 வழிச்சாலை பாலப்பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டு விரைவுபடுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: