* கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் ஓட்டல்களில் செயல்படும் பார்களிலும் மது பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
நகர்ப்புற கடைகள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், கிராமப்புற கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுக்கிறார்கள்.
நாகர்கோவில், மே 19: நாகர்கோவிலில் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். குறிப்பாக வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்படி குமரி மாவட்டத்தில், 18 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. நாகர்கோவில் மாநகரில் 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக வடசேரி பஸ் நிலையம் அருகில் செயல்பட்ட 2 டாஸ்மாக் கடைகள், கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஒரு டாஸ்மாக் கடை, மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள், ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலையில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள், ஆயுதப்படை ரோட்டில் இருந்த ஒரு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பஸ் நிலையங்களை சுற்றி இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் மது வகைகள் வாங்க திண்டாடி வருகிறார்கள். வடசேரி பஸ் நிலையம், கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்த 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாட்களாக மது பிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த டாஸ்மாக் கடையையும் மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைந்ததால், தற்போது திறந்து செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் வாங்க மது பிரியர்கள் முண்டியடித்து வருகிறார்கள். நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலையில், தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வகைகள் வாங்க கூட்டம் அதிகமாக உள்ளது. வரிசையில் நின்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் தனியார்கள் நடத்தும் கிளப் பார்களிலும் மது பிரியர்கள் குவிந்து வருகிறார்கள்.
காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த கிளப் பார்கள் இயங்கும் என்பதால், காலை 11 மணிக்கே இந்த பார்களில் மது பிரியர்கள் குவிந்து வருகிறார்கள். இந்த பார்களில் விலையும் அதிகரித்து இருக்கிறார்கள். இதே போல் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் ஓட்டல்களில் செயல்படும் பார்களிலும் மது பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. நகர்ப்புற கடைகள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், கிராமப்புற கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுக்கிறார்கள். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை செய்பவர்கள், பொது வெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று முன் தினம் பொது வெளிகளில், மது அருந்தியதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மூடலால், மது வகைகளை வாங்கி வந்து பொது வெளிகள், நீர் நிலைகளில் வைத்து மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
