நெல்லை, மே 18: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 3ம் நாளாக நேற்றும் தாமதமாக இயக்கப்பட்டதால் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, நெல்லைக்கு இரவு 7.20 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் மறுதினம் காலை 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இணை ரயில் வருகை தாமதம் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடந்த 2 தினங்களாக தென்மாவட்டங்களில் தாமதமாக இயக்கப்பட்டது.
தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இணை ரயில் வருகை தாமதம் காரணமாக தாமதமாக புறப்பட்டது. அதாவது அந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, இரவு 8.45 மணிக்கு புறப்பட்டது. நெல்லைக்கு சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தது.
தென்மாவட்டங்களில் பல ரயில்நிலையங்களில் அந்த ரயிலை எதிர்பார்த்து காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியதோடு, தாமதமாக வந்த ரயிலில் ஏறி சென்னை சென்றனர். இனிவரும் நாட்களிலாவது கன்னியாகுமரி எக்ஸ்பிரசை குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கிட துரித நடவடிக்கை வேண்டும் எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
