தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே முருகமலை அடிவார பகுதியில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி முருகமலை அடிவாரப்பகுதி தேவதானப்பட்டியில் ஆரம்பித்து, பெரியகுளம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளது. பருவமழை காலங்களில் முருகமலையில் பெய்யும் மழைநீர் 100க்கும் மேற்பட்ட ஓடைகள் வழியாக தெற்கு நோக்கி செல்கிறது. இந்த நீர்வழித்தட ஓடைகளை மறித்து குறுக்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
இதன்மூலம் நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடந்து வந்தது. இந்நிலையில், தடுப்பணைகளில் மண் மேவியதால் தண்ணீர் தேக்க முடியவில்லை. மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்துள்ள தடுப்பணைகளை சீரமைப்பதோடு புதிதாக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தரிசு நில மேம்பாட்டு திட்ட விவசாய குழுவினர் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி தொடங்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் மீண்டும் பயிர் சாகுபடி நிலங்களாக மாறும்’ என்றனர்.
