சென்னை: சென்னை மாநகரின் மிக முக்கியமான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி விஜயநகர் சந்திப்பு விளங்குகிறது. இந்த விஜயநகர் சந்திப்பு என்பது தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. எனினும், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் குறுகலான சாலை அமைப்பால் இப்பகுதியில் பேருந்துகளை நிறுத்தி இயக்குவதில் பெரும் சிக்கல்கள் நீடிக்கின்றன. தற்போதைய பேருந்து நிலையம், விஜயநகர் சந்திப்புக்கு மிக அருகிலேயே இருப்பதால், பேருந்துகள் வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மேலும், போதிய இடவசதி இல்லாததால், பயணிகள் சாலையிலேயே நின்று பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. இது விபத்துகளுக்கு வழிவகுப்பதோடு, பொதுமக்களுக்கும் இடையூறாக அமைகிறது. இந்நிலையில், விஜயநகர் சந்திப்பு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் மாநகர போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதன்படி, விஜயநகர் சந்திப்பில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருல் மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு தெற்கு பகுதியில், 6 ஏக்கரில் இடம் தேர்வு செய்து, அங்கு பல ஆண்டுகளுக்கு முன், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
தற்போது, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் நீண்ட தூர இடைவெளி இருப்பதால், பயணிகள் கால்கடுக்க நடந்து செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்த இடமாற்றம் மூலம் பேருந்து நிலையம், ரயில் நிலையத்திற்கு அருகில் அமைவதால், ரயிலில் வரும் பயணிகள் எளிதாகப் பேருந்து வசதியைப் பெற முடியும். அதேபோல் பேருந்தில் வருபவர்கள் உடனடியாக ரயில் நிலையத்திற்குச் செல்ல முடியும். இந்த ஒருங்கிணைப்பு பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். விஜயநகர் சந்திப்பை விட ரயில் நிலையப் பகுதியில் அதிக நிலப்பரப்பு கிடைப்பதால், அதிகப்படியான பேருந்துகளை நிறுத்தி வைக்கவும், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
இந்த இடமாற்ற திட்டத்தை அமல்படுத்த, கடந்த திமுக ஆட்சியில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்ற அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டது. குறிப்பாக, புதிய இடத்தை தயார் செய்தல், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து பாதைகளை மறுசீரமைத்தல் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டது. தற்காலிகமாக பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் புதிய வழித்தடங்கள் குறித்து பயணிகளுக்குத் தெளிவான அறிவிப்புகளை வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது வேளச்சேரி சந்திப்பில் 50% வரை போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த பேருந்து நிலையத்தை இடமாற்றும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, இதற்கான முதற்கட்ட பணிகளை கூட தொடங்காததால், இந்த திட்டம் எப்போது தொடங்கி எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘சென்னை போன்ற ஒரு வளர்ந்து வரும் பெருநகரத்தில், பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது என்பது காலத்தின் தேவையாகும். வேளச்சேரி பேருந்து நிலைய இடமாற்றம் என்பது வெறும் இடமாற்றமாக மட்டும் இல்லாமல், ஒரு நவீன மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்கான தொடக்கமாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் நீண்ட கால போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். தற்போது விஜயநகர் சந்திப்பில் பேருந்துகள் நுழைவு மற்றும் வெளியேறும் நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் உருவாகி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கும் நிலையில், சாலைகளின் குறுகலான அமைப்பு போக்குவரத்தை மேலும் சிக்கலாக்குவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் பாதசாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு அருகில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதால், ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கு இடையிலான இணைப்பு மேம்படும்.
இதன் மூலம் பயணிகள் ஒரு போக்குவரத்து சேவையிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாறிச் செல்ல முடியும். எனவே, இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். புதிய இடத்தில் கூடுதல் பேருந்து நிறுத்த வசதிகள், காத்திருப்பு நிலையங்கள், நடைபாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்க வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் ஏற்படுத்த வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘பரங்கிமலை – வேளச்சேரி – கடற்கரை மேம்பால ரயில் இணைப்புக்கு பின், வேளச்சேரிக்கு ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி பயணிப்பவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு ரயில் நிலையம் அருகே, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகத்துடன் வடிய புதிய பேருந்து முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் விரைவில் நடத்தப்படும். அதன்பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதை தமிழக அரசிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும். இந்த பேருந்து முனையத்தில் டீசல் பேருந்துகள், மின்சார பேருந்துகள் நிறுத் துவதற்கான வசதி செய்யப்படும். பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும். இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், மேடவாக்கத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.
