நத்தமலை கிராமத்தில் பாசன வாய்க்கால் ஷெட்டர் சேதம்; பாசனத்திற்கு வீராணம் தண்ணீர் விடாததால் வாடி வதங்கும் வெற்றிலை பயிர்கள்: விவசாயிகள் வேதனை

 

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெற்றிலை சாகுபடி பல ஆண்டுகளாக விவசாயிகள் செய்து வரும் நிலையில் பாசனத்திற்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடாததால் வெற்றிலைப் பயிர்கள் வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீராணம் ஏரியை ஒட்டிய கிராம பகுதிகளான கந்தகுமாரன், ராய நல்லூர், மானியம் ஆடூர், நத்தமலை, லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெற்று விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு சாகுபடி செய்து அறுவடை செய்யப்படும் வெற்றிலை வெளி மாவட்டங்களுக்கும், நகரப்புறங்களுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் துவங்கிய சில மாதங்களாக நத்தமலை கிராமத்திற்கு செல்லும் பிரதான பாசன வாய்க்கால் மூலம் விவசாயிகள் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் பெற்று வெற்றிலை சாகுபடி செய்து வந்த நிலையில் நத்தமலை கிராமத்திற்கு செல்லும் முகப்பு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டுவதற்காக ஒப்பந்ததாரர்கள் பணி செய்தபோது பாசனத்திற்கு செல்லும் வாய்க்காலை செம்மண் மூட்டைகளை கொண்டு அடைத்தனர். மேலும் நத்தமலை கிராம விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்த ஷட்டரையும் ஒப்பந்ததாரர்கள் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

அதன் பின்னர் கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வெற்றிலை சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வராததால் வெற்றிலைக் கொடிகள் வாடி வதங்கி வந்ததால் பாசனத்திற்கு விரைந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்து வருவதாகவும், வெற்றிலை சாகுபடி செலவு அதிகம் என்பதாலும் வெற்றிலைப் பயிருக்கு கடன் வசதி மற்றும் காப்பீடும் கிடைப்பதில்லை என்பதால் வெற்றிலைப் பயிரிடும் விளைநில பரப்பளவு குறைந்து வருகிறது.

வேளாண்துறை அதிகாரிகள் வெற்றிலைப் பயிரிடும் விவசாயிகளை முறைப்படி ஊக்கப்படுத்தாததால் பயிர் செய்வது குறைகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் நோய் தாக்கமும் அதிகரித்து வெற்றிலை பயிர்கள் வாடி வதங்கி கருகி வருகிறது. சாகுபடி குறைந்து வருவதால் வெற்றிலை சார்ந்த மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரிப்பை புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினர். எனவே வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதோடு அல்லாமல் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்பாட்டை அதிகரித்து வெற்றிலை பயிருக்கான சந்தையை உருவாக்கி வெற்றிலை விவசாயத்தை காப்பாற்றலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் சேதமடைந்துள்ள பாசன வாய்க்காலின் ஷட்டரை சீரமைத்து தூர்வாரி வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு நத்தமலை கிராமத்தில் வெற்றிலைப் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: