திருத்தணி முருகன் கோயிலில் முறையான பராமரிப்பில்லாததால் சரவணப்பொய்கை குளத்தில் துர்நாற்றம் வீசும் தண்ணீர்: தனியார் மண்டபங்களில் குளிக்கும் பக்தர்கள்

 

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் சரவணப் பொய்கை திருக்குளம் முறையான பராமரிப்பின்றி தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் ரூ.30 கொடுத்து தனியார் மண்டபங்களில் குளித்து விட்டு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறப்பு பெற்ற திருத்தணி முருகன் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.  பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்து, முருகன் கோயில் குளத்தில் குளித்து விட்டு படிகள் வழியாக மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

சரவண பொய்கை திருக்குளம் கடந்த ஆண்டு ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இருப்பினும், முறையாக பராமரிப்பு மேற்கொள்ளாததால், மழையின் போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளத்தில் நிரம்புகிறது. மேலும், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் குளத்தில் வெல்லக் கட்டிகள் வீசுவது, காவடிகளில் இருந்து மலர் மாலைகள் வீசுவது, பூஜை பொருட்களை குளத்தில் போடுவதால் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், மொட்டை அடிக்கும் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு செல்வோர் கோயில் குளத்தில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொட்டை அடித்துக் கொள்ளும் பக்தர்கள் குளம் அருகில் தனியார் மண்டபங்களுக்கு சென்று ரூ.30 செலுத்தி குளித்து விட்டு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

குளத்தில் பைப் லைன்கள் வீண்
பக்தர்கள் வீசும் மலர் மாலைகள், பூஜை பொருட்களால் குளத்தில் தண்ணீர் கருப்பு நிறமாக மாறி குளிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால், பக்தர்கள் வசதிக்காக குளத்தை சுற்றி இரும்பு வேலி அமைத்து மின் மோட்டார் மூலம் குழாய்களில் குளிக்க வசதிகள் செய்யப்பட்டும் முறையாக பயன்பாட்டில் இல்லை. எனவே, சிறப்பு பெற்ற சரவண பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் குளிக்க ஏதுவாக அவ்வப்போது குளத்திலிருந்து நீர் அகற்றி தூய்மையாக வைத்திருப்பதை இந்து சமய அறநிலையத்துறை உறுதிப்படுத்த வேண்டும். மழை நீருடன் கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: