வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தில் 19ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு

 

 

சென்னை: வங்கக் கடலில் தமிழக கடற்கரைக்கு மிக நெருக்கமாக மன்னார் வளைகுடா வரை நீண்டிருக்கும் காற்றுசுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்பும், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், சென்னை, கேளம்பாக்கம் பகுதியிலும் மழை பெய்துள்ளது. நேற்று மாலையில் இருந்து திருவள்ளூர் முதல் ஆந்திர எல்லையோரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வட சென்னையில் நேற்று மாலையில் மழை பெய்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் தற்போது வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் இயல்பில் இருந்து 4-5 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்தும் பிற இடங்களில் இயல்பை ஒட்டியும் இருக்கும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுப்பகுதிகளில் இன்று தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் இரு்ந்து அதே பகுதியில் நிலை கொண்டு இருந்ததால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்திலும் ஓரிருஇடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்யும். 17ம் தேதியில் திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் மழை பெய்யும். இதை நிலை 21ம் தேதி வரையில் நீடிக்கும். இதன் காரணமாக வெப்பம் குறைந்து காணப்படும்.

சென்னையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்தது. இன்றும் அதே நிலை நீடித்து சென்னையில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசும். அதனா்ல் மீனவர்கள் 19ம் தேதி வரையில் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

Related Stories: