சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் குழு: தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஜூன் 5க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு – திமுக தலைமை அதிரடி

 

 

சென்னை: சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய திமுகவில் 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஜூன் 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திமுக தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தோல்விக்கான காரணங்களை திமுக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது. அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க. திமுகவின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம். வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல.

அதுதான் நியாயம். முதலில் தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும். அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும். அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன். அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க. திமுக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன். இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன். ஆலோசனைகளை வெச்சு, திமுகவின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 14ம் தேதி (நேற்று முன்தினம்) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கிணங்க நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களது கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ம் தேதிக்குள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கும். ஆய்வின் போது குழுவினர் வருகையின் போது குழுவினர் மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர், வேட்பாளர்கள், தொகுதிக்கு உட்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவர். அதோடு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களையும் தனித்தனியே சந்திப்பர். இச்சந்திப்பின்போது மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருக்கக்கூடாது.

அதன்படி தொகுதி வாரியாக செல்ல உள்ள குழுவினர் விவரம்: சென்னை திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே. நகர், பெரம்பூர், ராயபுரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு எம்.எம். அப்துல்லா, ரேகா பிரியதர்ஷினி ஆய்வு செய்கின்றனர். எழும்பூர், கொளத்தூர், அம்பத்தூர், துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், மதுரவாயல், விருகம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு எஸ்.கே.பி. கருணா, கே.ஈ.பிரகாஷ் எம்.பி. செல்கின்றனர். உத்திரமேரூர், காஞ்சிபுரம், செய்யூர், மதுராந்தகம், ஆலந்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், பெரும்புதூர், திருப்போரூர், பல்லாவரம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிகளுக்கு ஹெலன் டேவிட்சன், கே.இளமகிழன் கள ஆய்வு நடத்த உள்ளனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் குழு சென்று ஆய்வு மேற்கொள்கிறது. அந்த குழுவினரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: