எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு: மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தூக்கியது ஏன்?

 

 

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்தித்து, தன்னை ஏன் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தூக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் வெற்றி பெற்றார். பெஞ்சமின் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதிமுக படுதோல்வி அடைந்து இருப்பதால் கட்சியில் தற்போது பிளவு ஏற்படுள்ளது. எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி என இருதரப்பாக எம்எல்ஏக்கள் பிரிந்துள்ளனர். கடந்த 13ம் தேதி பேரவையில் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 25 எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த 22 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து அதிமுக கொறடா உத்தரவை மீறி விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி தரப்பை சார்ந்த 25 எம்எல்ஏக்களையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார். அப்போது திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் பெயரும் இடம்பெற்றிருந்தது. குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்த தன்னை நீக்கியிருப்பதாகவும் நான் என்ன தவறு செய்தேன் எனவும் பெஞ்சமின் நேற்று முன்தினம் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்தித்து நேற்று பேசினார். அப்போது, ‘‘தொடர்ந்து தங்களுக்குத்தான் (எடப்பாடி) ஆதரவு தெரிவித்து வருகிறேன். எந்த இடத்திலும் மாற்று அணியினரோடு சேர்ந்து செயல்படாத நிலையில் நான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். ஆனாலும், பெஞ்சமினுக்கு நேற்று வரை மீண்டும் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி வழங்காததால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: