ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

 

 

சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டருக்கான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்த ஒன்றிய பாஜ அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை திடுமென உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த மக்கள்விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. பெட்ரோல்-டீசல் ஆகியற்றின் விலையை லிட்டருக்கு ரூ.3 என உயர்த்தி இருப்பதன் மூலம் பாஜ அரசு எளிய மக்களின் அடிவயிற்றில் கை வைத்துள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் பக்க விளைவுகளாக அனைத்து இன்றியமையாத அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசியும் வெகுவாக உயரும். இதனால் மிகவும் பாதிக்கப்படப் போவது விளிம்புநிலையைச் சார்ந்த ஏழை எளிய உழைக்கும் மக்களே ஆவர். எனவே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்கத்தை அதிகரித்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே, ஒன்றிய அரசு காஸ் சிலிண்டர், 5 கிலோ சிலிண்டர் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்தி, சாமான்ய மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியது. போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதன் மூலம் காய்கறி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் மக்கள் நலன் குறித்து பேசும் ஒன்றிய அரசு, தேர்தல் முடிந்தவுடன் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பலன்களை நாட்டு மக்களுக்கு அளிக்காமல் ஒன்றிய அரசு அந்த வருவாயை தன்னகத்தே வைத்துக் கொண்டது. தற்போது உள்ள சூழ்நிலைகளை காரணம் காட்டி, தொடர்ந்து மக்களிடமிருந்து வரி வசூலித்து வருவது மக்களை ஏமாற்றும் செயல். ஒன்றிய பாஜ அரசு உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அன்புமணி (பாமக தலைவர்): பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன.

இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்.

 

Related Stories: