விவாகரத்து கோரிய வழக்கு தள்ளுபடி; கணவர் பணிபுரியும் இடத்திற்கு மனைவி செல்ல வேண்டிய அவசியமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: மனைவி தனது பணியின் காரணமாக கணவருடன் வசிக்க மறுப்பதை கொடுமை என்று கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமணத்திற்குப் பின் மனைவி தனது கணவர் இருக்குமிடத்திற்குச் செல்வதே மரபாகக் கருதப்பட்டது. ஆனால், தனது வேலை மற்றும் குடும்பச் சூழல் காரணமாகப் பிறந்த வீட்டில் தங்கிப் பணிபுரிந்த ஒரு பெண்ணிற்கு எதிராக அவரது கணவர் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார். மனைவி தன்னுடன் வந்து வசிக்க மறுப்பது ஒருவித கொடுமை என்றும், அவர் தன்னைக் கைவிட்டு விட்டார் என்றும் கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இல்லறக் கடமையின்படி மனைவி கணவனின் சூழலில் வசிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து, ஆயிரக்கணக்கான திருமணப் பிரச்னை தொடர்பான வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதில், ‘மனைவி என்பவர் கணவருக்குக் கட்டுப்பட்ட சொத்து அல்ல. திருமணம் என்பது சமமான இருவருக்கு இடையிலான கூட்டாண்மை ஆகும்.

மனைவி தனது பணியின் காரணமாகவோ அல்லது சமூகப் பாதுகாப்பு கருதியோ ஓரிடத்தில் தங்குவதை கணவருக்கு இழைக்கப்படும் கொடுமையாகக் கருத முடியாது. ஒரு பெண்ணின் தொழில்முறை அடையாளத்தையும் விருப்பத்தையும் மதிக்க வேண்டியது கணவரின் கடமை. மேலும், கணவர் தனது வசதிக்காக மனைவியை வேலையை விடச் சொல்லி வற்புறுத்த முடியாது’ என்று கூறி விவாகரத்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: