சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார். 38 வயதான பிரதீக் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவருமான மறைந்த முலாயம் சிங் யாதவின் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் காலமானார். அகிலேஷ் யாதவின் சகோதரர் இவர். முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சாதனாவின் மகன் பிரதீக் யாதவ். இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் MBDA பட்டம் பெற்றிருந்த பிரதீக் யாதவ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் உத்தரப் பிரதேச பாஜக மகளிர் அணி தலைவி. அபர்ணாவுக்கும் பிரதீக் யாதவுக்கும் அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு பிரதீக் யாதவை அவரது குடும்பத்தினர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரதீக் யாதவ் மருத்துவமனைக்கு கொண்டுவந்த நேரத்தில் அவரது மனைவி அங்கு இல்லை. பிரதீக் யாதவ் சுயநினைவின்றி லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அங்கு அவர் வந்தடைந்தவுடனேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்கள் குழு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யவுள்ளது. முதற்கட்ட ஆய்வின்படி, உடலில் காயங்களுக்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு வந்த அவர், உடற்பயிற்சி ஆர்வலராகவும் அறியப்பட்டார். அது சார்ந்த தொழில்களில் மட்டுமே செய்து வந்தார். எனினும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பிரதீக் யாதவுக்கும் இடையே மிகவும் நல்ல உறவு இருந்தது. அகிலேஷ் தனது தம்பியை மிகவும் நேசித்தார். இந்த நிலையில் பிரதீக் யாதவின் மரணம் உத்தரப் பிரதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
