திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி விவகாரம்; ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: எதிர் மனுதாரர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை திருப்பத்தூர் தொகுதிக்கு வர வேண்டிய தபால் வாக்குகள் தவறுதலாக திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை அவசரமாக விசாரித்து உயர்நீதிமன்றம் தடை விதித்ததில் உள்நோக்கம் உள்ளது. தற்போது திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறிவிட்டதால் இந்த பிரச்னையில் வேறு ஒன்றுமில்லை. இதனை ஒரு தேர்தல் வழக்காகவே கருதி விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறினார். பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடுகையில், ‘தேர்தல் அதிகாரியின் தவறான செயல்பாட்டால் ஒரு தொகுதிக்கு வர வேண்டிய தபால் வாக்குகள் வேறு மாவட்டத்திற்கு சென்றுவிட்டது. இதனால் தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது. நீதிமன்ற நடைமுறைப்படி அவசர வழக்காக இம்மனு விசாரிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு செயல்பட்டு இருக்கக்கூடாது என அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்றத்தின் செயல்பாடு கடுமையானது மற்றும் கொடூரமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவு மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். இருப்பினும், வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் தரப்பு 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். சீனிவாச சேதுபதி தரப்பில் இதற்கான விளக்க மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான தடை நீங்கியுள்ளது.

Related Stories: