டெல்லி: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தின் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக போர் பதற்றம் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்குமானால் நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மேலும் அதிகரிக்க கூடும். இதனிடையே எரிபொருள் விலை உயர்வு பற்றி பேசி இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா, உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் இந்த விலை உயர்வினால் ஏற்படும் கூடுதல் சுமையை அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தாங்கிக்கொண்டு வருகின்றன.
ஆனால் இந்த சூழல் நீண்ட காலத்திற்கு நீடிக்குமேயானால், விலை உயர்வினால் ஏற்படும் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் தவிர்க்க முடியாமல் வேறுவழியின்றி நுகர்வோர் மீது சுமத்த வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். ஏனெனில், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி இருக்கிறார். தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை மாற்றாமலேயே வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம் எனவும் கூறி இருக்கிறார்.
அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க எரிபொருள் நுகர்வைக் குறைக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்த கருத்து பொதுமக்களிடையே எரிபொருள் விலையேற்றம் குறித்து கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
