சமயபுரம், மே 13: மண்ணச்சநல்லூர் அருகே மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
மண்ணச்சநல்லூரில் பூமிநாதர் கோயில் அருகே மண்ணை மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சிவன் அலங்கார திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருடம் 41ம் ஆண்டு அலங்கார திருவிழா மே 10ம்தேதி கொடியேற்றி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. மேலும் இத்திருவிழாவானது தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும். இதில் இந்தாண்டு விஸ்வரூப சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளம் முழங்க, பக்தி பரவசத்துடன் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவ மண்ணை மகா மாரியம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மண்ணச்சநல்லூர் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
