சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லரை விற்பனை கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 717 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லரை விற்பனைக் கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
50 கடைகள் மூடல்: தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை 12 நாள்களில் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக சென்னை மண்டலத்தில் 10 கடைகள், திருச்சி மண்டலத்தில் 9 கடைகள், மதுரை மண்டலத்தில் 9 கடைகள், சேலம் மண்டலத்தில் 10 கடைகள், கோவை மண்டலத்தில் 12 கடைகள் என மொத்தம் 50 நேற்று முதல் மூட உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா, ஸ்டாலின் ஆட்சியில் 1,596 கடைகள் மூடல்
முந்தைய ஆட்சிகளின்போதும் நூற்றுக்கணக்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சியின்போது 2016ல் 500 டாஸ்மாக் கடைகளும் 2017ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோல், திமுக ஆட்சியில் 2021ம் ஆண்டு 96 கடைகளும் 2023ம் ஆண்டு 500 கடைகளும் என 596 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
