அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத்தில் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் கில் ஆகியோர் களமிறங்கினர். கில் 5 ரன்னிலும், அடுத்த வந்த பல்டர் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 22 ரன்னில் நடையை கட்டினார். இதனால் 9.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து குஜராத் அணி திணறியது. இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சதர்சனுடன் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினார். 61 ரன் (44 பந்து, 5 பவுண்டர், 2 சிக்சர்) எடுத்து நிலையில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன் (33 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் 11 ரன், திவாட்டியா 4 ரன் எடுக்க குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் பிரபுல் ஹிங்கே மற்றும் ஷகிப் ஹூசைன் தலா 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.169 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
