மிட்டனமல்லி சி.ஆர்.பி.எப் நகரில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி: அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு மிட்டனமல்லி பகுதியில் சி.ஆர்.பி.எப் நகர், பரத் அவென்யூ, மைக்கேல்ஸ் நகர் ஆகிய பகுதிகள்  உள்ளன. இந்த நகர்கள் அனைத்தும் கடந்த 2004ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்குள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை பெருநகர வளர்ச்சி  குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். மேற்கண்ட நகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்புத்துறையில் தற்போது பணியாற்றி  வரும் ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஆவார்கள். மேற்கண்ட பகுதிகளில், பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “சி.ஆர்.பி.எப் நகர், பரத் அவென்யூ, மைக்கேல்ஸ் நகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி அறவே  இல்லை. சிறிது மழை பெய்தால் கூட தெருக்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. மேலும், இங்கு வடிகால் வசதி இல்லாததால்,  தெருக்களில் தண்ணீர் செல்ல முடியவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர  வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியவில்லை. குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையில் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு  வண்டிகள் வரமுடியவில்லை. மேலும், இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ, கால் டாக்சியை அழைத்தால் கூட, மோசமான  சாலையை காரணம் காட்டி வருவதில்லை.

இதனால் நோயாளிகளை அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், பல தெருக்களில் மின் விளக்குகள்  அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனை பயன்படுத்தி, சமூகவிரோதிகள் செயின் பறிப்பு,  பெண்களிடம் சில்மிஷம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் மோசமாக இருப்பதால் போலீசாரும் சரிவர ரோந்து  பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், இரவு நேரங்களில் வீடுகளில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு  போய் வருகின்றன. குடியிருப்போர் வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு  சொந்தமான காலி மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அந்த வழியாக மழைநீர் செல்ல முடியவில்லை. இதனால், நகர் முழுவதும்  மழை காலத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவி வருகிறது. அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட  பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள்  அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனி மேலாவது, மிட்டனமல்லி  சி.ஆர்.பி.எப் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories:

>